சென்னை : சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கவும் மருந்துகளை வழங்கவும் ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன.
கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து இன்று(ஏப்.,3) சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.
தொடர்ந்து, கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு தொற்று பரவ கூடிய ஆபத்து நிறைந்த சூழல் இருப்பதால் அதிக எச்சரிக்கையுடன் இருக்கவும் அரசு அறிவித்தது. இந்நிலையில் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா நோய்க்கு சிகிச்சை அளித்த மருத்துவருக்கு கொரோனா தொற்று பரவியது கண்டறியப்பட்டது. இதனால் தமிழகத்தில் அது போன்ற அசம்பாவிதம் நடக்காமல் இருக்க நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்துகள் வழங்க ரோபோக்கள் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.